search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவி பலி"

    • வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை ரேகா கடக்க முயன்றார்.
    • திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று மதியம் இளம்பெண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பலியானவர் செவ்வாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரேகா (வயது22) என்பது தெரிய வந்தது.

    இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். ரேகாவுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து அவர் வீட்டின் அருகே உள்ள பியூட்டி பார்லருக்கு சென்று விட்டு வீட்டுக்கு வர செவ்வாப்பேட்டை ரெயில்வே கேட்டை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே வந்த விரைவு ரெயில் மோதி ரேகா பலியாகி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    • கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கள்ளியம்புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி அலமுலு (38). இவர்களது மகள் ஜனனி (19). இவர் பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜனனிக்கு கடுமையான காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மர்ம காய்ச்சலால் பாதித்த ஜனனி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கல்லூரி மாணவி மர்ம காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற மாணவி மீது சென்னையில் இருந்து சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் உரசியது.
    • தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    வண்டலூர்:

    பெருங்களத்தூர், திருவள்ளுவர் நகர், 3-வது குறுக்குத்தெவை சேர்ந்தவர் கிருத்திகா (வயது20). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று மாலை அவர் கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக பொத்தேரி ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் அங்குள்ள நடைமேடை மேம்பால படிக்கட்டை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, சென்னையில் இருந்துசென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மாணவி மீது உரசியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி கிருத்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை கண்டு ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் விரைந்து வந்து பலியான மாணவி கிருத்திகாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஒத்தக்கடை அருகே பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவி மீது கார் மோதிய விபத்தில் அவர் பலியானார். 2 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலூர்:

    மதுரை கோரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மகள் தாரணி. இவர் ஒத்தக்கடை அருகே நெல்லியேந்தல்பட்டியில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடித்து விட்டு பஸ் ஏறுவதற்காக கல்லூரி முன்புள்ள 4 வழிச்சாலை பஸ் நிறுத்தத்தில் தாரணி நின்று கொண்டிருந்தார்.

    அப்போது பாண்டிச்சேரியில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவி தாரணி மற்றும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த மாணவி செல்லூர் சுயராஜ்யபுரத்தைச் சேர்ந்த லாவண்யா, கப்பலூரைச் சேர்ந்த மாணவர் நிதிஷ் குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த தாரணி இன்று காலை பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து தொடர்பாக ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் வழக்குப்பதிவு செய்து காரில் வந்த பாண்டிச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரை கைது செய்துள்ளார்.

    தஞ்சை அருகே இன்று அதிகாலை டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

    வல்லம்:

    தஞ்சையை அடுத்துள்ள வல்லம் அருகே உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்து வருபவர்கள் சென்னையை சேர்ந்த பரத் (வயது 21), கேரளா வயநாட்டை சேர்ந்த அரவிந்த் (21), சென்னையை சேர்ந்த சூர்யா (21).

    மேலும் இதே பல்கலைக்கழகத்தில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவிகள் திருவாரூரை சேர்ந்த ரம்யா (21), சென்னையை சேர்ந்த நித்யா (21), இதே பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு ஜந்தாம் ஆண்டு படித்து வருபவர் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சவுமியா (21).

    இதில் மாணவர்கள் பரத், அரவிந்த், சூர்யா ஆகியோர் தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளனர். மாணவிகள் ரம்யா, நித்யா, சவுமியா ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளனர்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் கேரளாவை சேர்ந்த மாணவர் அரவிந்தை ரெயிலில் ஏற்றி விடுவதற்காக பரத்,ரம்யா,சூர்யா, நித்யா,சௌமியா ஆகியோர் பரத்தின் காரில் திருச்சி சென்றனர். அங்கே அரவிந்தை திருச்சி ரெயில் நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு காரில் தஞ்சைக்கு அதிகாலை 5.30 மணி அளவிற்கு வந்து கொண்டிருந்தனர்.

    இவர்கள் தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி-திருச்சி சாலையில் மூன்று கண் பாலம் அருகே வந்த போது இவர்களின் கார் டயர் வெடித்து சாலையில் நான்கு முறை உருண்டு கவிழ்ந்துள்ளது. அப்போது காரின் உள்ளே இருந்த மாணவி ரம்யா வெளியே தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார். அப்போது அருகே வந்த மற்றொரு அடையாளம் தெரியாத வாகனத்தில் ரம்யாவின் ஆடை மாட்டி கொண்டு சிறிது தூரம் அந்த வாகனம் ரம்யாவை இழுத்து சென்றுள்ளது. இதில் ரம்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

    மேலும் காருக்குள் அடியில் சிக்கி கொண்டிருந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டனர். இதில் நித்யா, சவுமியா, சூர்யா ஆகியோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    பீளமேடு அருகே செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற கல்லூரி மாணவி ரெயில் மோதி பலியானார்.
    கோவை:

    கோவை பீளமேடு கருப்பண்ணா கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரியா (வயது 18). இவர் சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு புறப்பட்டார். பீளமேடு- இருகூர் இடையே உள்ள ரெயில் தண்டவாளத்தில் செல்போன் பேசியபடியே நடந்து சென்றார். அப்போது அந்த வழியே வந்த ரெயிலை அவர் கவனிக்கவில்லை.

    கண் இமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த ரெயில் பிரியா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஏசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடல் துண்டாகி கிடந்த மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரியா பலியான சம்பவம் அவரது குடும்பம் மற்றும் கல்லூரி மாணவிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கோவை அருகே உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவர் இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றார். திடீரென அவர் கல்லூரி முதல் மாடியில் இருந்து குதித்தார்.

    அதிர்ச்சியடைந்த சகமாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். படிக்க விருப்பம் இல்லாததால் மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது விசாரணையில் தெரிய வந்தது.
    குடியாத்தம் அருகே தந்தை கண்முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி மகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

    குடியாத்தம்:

    குடியாத்தம் கே.வி.குப்பம் அருகே உள்ள ஆலங்கநேரியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). முன்னாள் ராணுவ வீரர். இவரது மகள் பார்கவி (18) இவர் வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    பார்கவி கல்லூரிக்கு செல்வதற்காக அவரது தந்தை தினமும் பைக்கில் பள்ளிக்கொண்டா பஸ் நிறுத்தத்திற்கு அழைத்து சென்று விடுவது வழக்கம். இன்று காலை அதே போல் சங்கர் பார்கவியை பைக்கில் அழைத்து சென்றார். பள்ளிகொண்டா அருகே உள்ள ஐதர்புரம் என்ற இடத்தில் சென்ற போது முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்றார்.

    அப்போது நிலை தடுமாறிய பார்கவி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். அப்போது லாரி சக்கரத்தில் சிக்கி பார்கவி சம்பவ இடத்திலேயே துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    ஆத்தூர் அருகே இன்று பஸ் சக்கரத்தில் சிக்கி கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புத்திரகவுண்டம் பாளையம், தேவேந்திரநாடு பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகள் நாகவள்ளி (வயது 21). மாற்றுத்திறனாளி. இவர் வட சென்னிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் எம்.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு பெற்றோர் இல்லாததால் அக்கா வீட்டில் இருந்து கல்லூரிக்கு தினமும் பஸ்சில் சென்று வருவார்.

    இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தார். அப்போது அவர் பஸ்சில் ஏறுவதற்காக முன் பக்கமாக வந்தார். இவர் வருவதை கவனிக்காமல் டிரைவர் பஸ்சை எடுத்தார். அப்போது பஸ் நாகவள்ளி மீது மோதியது. இதில் அவர் நிலைத்தடுமாறி பஸ் சக்கரத்தில் விழுந்தார். பஸ் சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதை பார்த்த சக மாணவிகள் நாகவள்ளி உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வீரகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாணவியின் உடலை மீட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவி பலியானார். பேராசிரியர் படுகாயம் அடைந்தார்.

    திருவெண்ணைநல்லூர்:

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சீனிவாசபாபு. இவரது மகள் சாய்மானஷா (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பே‌ஷன் டெக்னாலஜி படித்து வந்தார்.

    அதே கல்லூரியில் சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த பென்திலிப் (30) என்பவர் பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு சாய்மானஷாவும், பென்திலிப்பும் சுற்றுலா செல்வதற்காக ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து கேரளா மூணாறுக்கு புறப்பட்டனர். அந்த மோட்டார் சைக்கிள் நள்ளிரவு 1 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அடுத்த அரசூர் பகுதியில் வந்த போது எதிரே வந்த மாட்டு வண்டி மீது திடீரென மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சாய்மானஷா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பென்திலிப் பலத்த காயம் அடைந்தார். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோகிந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பலத்த காயம் அடைந்த பென்திலிப்பை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்து பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    கேரள மாநிலம் திருச்சூரில் பஸ் ஏறி இறங்கிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கேரள மாநிலம் திருச்சூர் புழக்கல் பகுதியை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மகள் கிருஷ்னேந்து (வயது 18). கல்லூரி மாணவி. இவர் இன்று காலை அங்குள்ள உறவினர் வீட்டுக்கு மொபட்டில் சென்றார். அங்கு அவர்களை பார்த்து விட்டு மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டார்.

    புழக்கல் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே திருச்சூரில் இருந்து குன்னங்குளத்திற்கு ஒரு தனியார் பஸ் வேகமாக வந்தது. எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் கல்லூரி மாணவி ரோட்டில் தவறி விழுந்தார்.

    அப்போது அதே பஸ்சின் பின் சக்கரம் மாணவி மீது ஏறி இறங்கியது. இதில் மாணவி கிருஷ்னேந்து உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து குன்னங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் ரங்கராஜன். இவரது மகள் மைதிலி (வயது 22). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார். பீளமேட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மைதிலி, கோத்தகிரியை சேர்ந்த ஒருவருடன் பீளமேட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிள் சாலை தடுப்புச்சுவரில் மோதியது. இதில் மைதிலி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். 

    இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து புலனாய்வு கிழக்கு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விபத்தை ஏற்படுத்திய காரை ஒட்டி வந்த உக்கடத்தை சேர்ந்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×